மகனை அடித்துக் கொன்று உடலை வாய்க்காலில் வீசிய தந்தை... கோபி அருகே பயங்கரம்!

 
murder

ஈரோடு மாவட்டம் கோபி அருகே மகனை கடப்பாரையால் அடித்துக்கொன்றுவிட்டு மாயமானதாக நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த திங்களுர் ஊராட்சி நிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன் - பாவாயாள் தம்பதி. இவர்களது மகன் பெரியசாமி (42). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி முதல் பெரியசாமி மாயமானதாக கூறி, காளியப்பன் திங்களுர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் காளியப்பன், வீட்டின் அருகே செல்லும் கீழ்பவானி வாய்க்காலில், சாக்கு முட்டையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்தது. 

gobi

சடலத்தை கைப்பற்றிய போலீசார், காளியப்பனை அழைத்துச் சென்று காண்பித்தபோது அது மாயமான பெரியசாமி என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பெரியசாமியை, அவரது தந்தை காளியப்பனே அடித்துக்கொன்று மாயமானதாக நாடகமாடியது தெரியவந்தது. மேலும், போலீசாரின் விசாரணையில் சம்பவத்தன்று பெரியசாமி, தோட்டத்தில் போர்வெல் அமைப்பதற்காக காளியப்பனிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு காளியப்பன் மறுப்பு தெரிவித்ததால் தந்தை - மகன் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

arrest

இதில் ஆத்திரமடைந்த பெரியசாமி, வீட்டிலிருந்த கடப்பாரையை எடுத்து தந்தையை தாக்க முயன்றார். அப்போது, காளியப்பன் கடப்பாரையை பறித்து பெரியசாமியை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து, சடலத்தை வாய்க்காலில் வீசியதை காளியப்பன் ஒப்புக் கொண்டார். இதனை தொடர்ந்து, காளியப்பனை திங்களுர் போலீசார் கைது செய்தனர்.