சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை... பாலக்கோடு அருகே பரபரப்பு!

 
suicide

தருமபுரி அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தனக்கு தண்டனை கிடைக்கும் என அச்சத்தில் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிச்சந்தை கிராமத்தை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (44). ஓட்டுனர். இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்துள்ளார். இது குறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மகேந்திர மங்கலம் போலீசார், கணேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தருமபுரி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கணேசன் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரிடம் சமரசமாக சென்றுவிடலாம் என கூறியுள்ளார்.

palacode

ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் வழக்கில் தனக்கு தண்டனை கிடைப்பது உறுதி என கருதிய கணேசன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் அங்கு வந்த மகேந்திரமங்கலம் போலீசார், கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.