தேமல் நோயால் தகர்ந்த ராணுவத்தில் சேரும் கனவு... விரக்தியில் உயிரை மாய்த்த கல்லூரி மாணவர்!

 
suicide

ராமநாதபுரத்தில் ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் அருகே உள்ள முதுநாள் பகுதியை சேர்ந்தவர் ஐய்யப்பன். இவரது மகன் சரண்(20). இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., வேதியியல் இறுதி ஆண்டு படித்து வந்தார். சிறு வயது முதலே ராணுவத்தில் சேர வேண்டும் என விரும்பிய சரண், இதற்காக பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் 30ஆம் தேதி நாகர்கோவில் நடைபெற்ற ராணுவ வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு முகாமில் அவர் பங்கேற்றுள்ளார். அப்போது, அனைத்து வித தேர்வுகளிலும் சரண் தகுதி பெற்ற நிலையில், உடல் பரிசோதனை தேர்வின்போது, அவரது உடலில் தேமல் பாதிப்பு இருப்பது தெரியவந்ததால், அவர் நிராகரிக்கப்பட்டு உள்ளார்.

ramnad gh

தேமல் பாதிப்பினால் தனது ராணுவத்தில் சேரும் கனவு தகர்ந்ததால் சரண் மனவேதனையுடன் காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அஙகு சரணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சரணின் தந்தை ஐய்யப்பன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.