வேலூர் அருகே ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை!

 
robbery

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே தனியார் பள்ளி ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள எம்.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் வில்சன் டேவிட். இவரது மனைவி மின்னி. இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியை ஆக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். மாலை பணிமுடிந்து வில்சன் டேவிட் வீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த டேவிட் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.

melpatti

அப்போது, மர்மநபர்கள் தனியறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 30 பவுன் நகைளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து வில்சன் டேவிட் மேல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.