உசிலம்பட்டி அருகே பெண் சிசு உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

 
infant

உசிலம்பட்டி அருகே பிறந்து சில மாதங்களே ஆன பெண் சிசு உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கோவிலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ். இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கருப்பாயி. இத்தம்பதிக்கு 5 மற்றும் 3 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கருப்பாயிக்கு கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை என இரட்டை குழந்தை பிறந்தது. இதனிடையே பெண் குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு பால் குடித்தபோது பெண் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

police

இதனை அடுத்து, குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது வழியிலேயே பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்த வாலாந்தூர் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை உடல்நல குறைவால் உயிரிழந்ததா? அல்லது கொலை செய்யப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.