கொரடாச்சேரி அருகே எண்கண் வெட்டாறு கதவணையில் நீரோட்டத்தை ஆய்வுசெய்த ஆட்சியர்!

 
tvr

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து பருவமழையின் நிலையை கண்காணித்து வருவதாக, ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே எண்கண் பகுதியில் உள்ள வெட்டாறு கதவணையில் தற்போது 796 கனஅடிநீர் சென்று கொண்டிருக்கிறது. இதனை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு, பொறியாளரிடம் நீரோட்ட அளவை கேட்டறிந்து, நீரோட்டத்தை தொடர்ந்து கண்காணித்திட உத்தரவிட்டார்.

பின்னர் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்ததாவது:-  வானிலை ஆய்வு மையம் மூலம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் பெறப்பட்டு அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை ஆட்சியர்கள் நிலையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சரக அளவிலும், கோட்ட அளவிலும் 13 குழுக்கள் அமைக்கப்பட்டு இக்குழுக்கள் மூலம் தொடர்ந்து வடகிழக்கு பருவமழையின் நிலையினை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், தாழ்வான பகுதிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

tvr

தாழ்வான பகுதிகளில் 1.30 லட்சம் மணல் மூட்டைகளும், 84,500 சாக்குகளும், 500 சவுக்கு மரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், நீர் நிலைகளின் நீரோட்டங்களை நீர்வளத்துறை அலுவலர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 106 மரம் அறுக்கும் இயந்திரம், 116 ஜேசிபி இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

மாவட்ட ஆட்சியரக தரைத்தளத்தில் வடகிழக்கு பருவமழை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.  புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாக எவ்வித இடர்பாடுகளும் ஏற்படாத வகையில் துறைவாரியாக முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது, என அவர் தெரிவித்தார்.