மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு சொந்த முயற்சியில் வீடு கட்டிக்கொடுத்த ஆட்சியர்!

 
tanjore

தஞ்சை அருகே மாற்றுத் திறனாளி பெண்ணிற்கு, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தனது சொந்த முயற்சியில் வீடு கட்டிக்கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் செருபாலக்காடு ஊராட்சி பத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் லதா. கால்கள் நடக்க முடியாத மாற்றுத் திறனாளியான இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். சொந்த வீடு இல்லாததால் லதா, அதே பகுதியில் தென்னந்தோப்பில் குடிசை அமைத்து வசித்து வந்தார். மேலும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் தனக்கு சொந்த வீடு வழங்கக் கோரி மனு அளித்திருந்தார்.அவரது மனுவை ஆட்சியர் பரிசீலனை செய்தபோது, சொந்த நிலம் இல்லாததால் அவருக்கு அரசு ஒதுக்கீட்டில் பசுமை வீடு உள்ளிட்டவை வழங்க முடியாது என்பது தெரிய வந்தது.  அப்போது, செருப்பலாகாடு பகுதியை சேர்ந்த தாஜுதீன் என்பவர் தனது நிலத்தில் லதாவிற்கு வீடு கட்ட இலவசமாக நிலம் வழங்கி உதவினார்.

tanjore

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தனது சொந்த நிதி மற்றும் நண்பர்களிடம் நிதியுதவி பெற்று வீடு கட்டும் பணிக்கு வழங்கினார். அத்துடன் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் நிதியுதவி செய்தது மட்டுமின்றி கட்டுமான பணிகளுக்கு உதவி புரிந்தனர்.கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் புதுமனை புகுவிழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் எம்எல்ஏ அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு லதாவின் புதிய வீட்டினை திறந்து வைத்தனர். மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு ஆட்சியர் தனது சொந்த முயற்சியில் வீடு கட்டிக்கொடுத்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.