வாணியம்பாடியில் நகையை திருடிய கொள்ளையனை விரட்டிச்சென்று பிடித்த சிறுவன்!

 
vaniyambadi

வாணியம்பாடி பஜார் பகுதியில் உள்ள நகைக்கடையில் நகையை திருடிய வடமாநில இளைஞரை துரத்தி பிடித்த சிறுவன், பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தார்.  

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஹம்மத் அலி பஜார் பகுதியில் நேமிசந்த் என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று மதிய உணவு சாப்பிடுவதற்காக, கடையில் தனது மகன் நோஜல் என்பவரை விட்டுவிட்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.  கடையில் சிறுவன் நோஜல் தனியாக இருப்பதை அறிந்த வடமாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்கள், கடைக்கு நகை வாங்குவது போல சென்று சிறுவனிடம் நகைகளை காட்டும்படி கூறியுள்ளனர். இதனால் அந்த சிறுவன் அவர்களுக்கு  பல்வேறு நகைகளை காட்டி உள்ளார். அப்போது, திடீரென அந்த இளைஞர்கள் கடையில் இருந்த 2 நகைப் பொட்டலங்களை தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.

vaniyambadi

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் நோஜல் பஜார் பகுதியில் தப்பியோடிய திருடர்களை துரத்திச்சென்ற நிலையில் பொதுமக்கள் உதவியுடன் ஒருவரை மடக்கிப்பிடித்தார். தொடர்ந்து, பொதுமக்கள் அந்த இளைஞருக்கு தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் நகையுடன் தப்பியோடிய மற்றொரு கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வாணியம்பாடி பஜார் பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.