சேலம் அருகே லாரி ஓட்டுநர் உடல் துண்டிக்கப்பட்டு படுகொலை - போலீசார் விசாரணை!

 
murder

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே லாரி ஓட்டுநர் உடல் துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பெரியசோரகை மாட்டுக்காரன் வளவு பகுதியை சேர்ந்த மணி. லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று மணியின் மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு கணவரிடம் பேசியுள்ளார். அதன் பிறகு மணியின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

salem

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தாரமங்கலம் அருகே கருக்குப்பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் ஆண் பிணம் ஒன்று மிதந்தது. இது குறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் தாராமங்கலம் போலீசார் மற்றும் ஓமலூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறங்கி உடலை மீட்டனர். அப்போது, கிணற்றில் சடலமாக கிடந்தவரின் 2 கைகள் துண்டிக்கப்பட்டும், அவரது பாதி உடல் மட்டுமே கிடந்தது. போலீசாரின் விசாரணையில் அது மாயமான லாரி ஓட்டுநர் மணி என்பதும், கொலையாளிகள் அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி, கைகள், கால்கள் மற்றும் பாதி உடலை வேறு எங்கோ? வீசிச் சென்றதும் தெரிய வந்தது.

இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவரது உடலின் மற்ற பகுதிகள் அங்கு கிடக்கிறதா? என தீரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். லாரி ஓட்டுநர் உடல் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.