மதுரையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த ரவுடி வெட்டிக்கொலை... 5 பேர் கும்பல் வெறிச்செயல்!

 
murder

மதுரை ஒத்தக்கடை அருகே வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த ரவுடியை, 5 பேர் கும்பல் வீடு புகுந்து வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்தவர் அழகுபாண்டி(32). கூலி தொழிலாளி. இவர் மீது சிவகங்கை மாவட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் அழகுபாண்டி, ஆந்திர மாநிலம் திருப்பதியில் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றின் விசாரணைக்கு ஆஜராவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் வந்த அழகுபாண்டி, மதுரை ஒத்தக்கடை அருகே மேல உறங்கான்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கி இருந்தார்.

police

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அவரது வீட்டிற்கு வந்த 5 பேர் கும்பல், அங்கு தூங்கிக்கொண்டிருந்த அழகுபாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒத்தக்கடை போலீசார், அழகுபாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.