ஒடும் ரயிலில் கள்ளக்காதலியை தள்ளி கொன்ற வடமாநில இளைஞர்... பெருந்துறையில் பதுங்கியவரை மடக்கிப்பிடித்த தனிப்படை போலீசார்!

 
men arrest

ஓடும் ரயிலில் கள்ளக்காதலியை தள்ளி கொலை செய்துவிட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பதுங்கியிருந்த வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்நதவர் நிரப்ப தாஸ் மகாதித். இவரது மகள் பிரத்திமா தாஸ். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவரை பிரிந்து 5 ஆண்டுகளாக தனியே வாழ்ந்து வந்த பிரத்திமா தாசுக்கு, அதே பகுதியை சேர்ந்த ஜகான்கீர் ஜர்தார் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜகான்கீர் ஜர்தாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள நிலையில், பிரத்திமாவுடன் பழகி வந்துள்ளார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், மனைவியை விவாகரத்து செய்து விட்டு தன்னை 2-வது திருமணம் செய்துகொள்ளும்படி பிரத்திமா, ஜகான்கீர் ஜர்தாரை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகின்றது.
 
இதனால் ஆத்திரமடைந்த  ஜகான்கீர் ஜர்தார், கடந்த மே மாதம் பிரத்திமாவுடன் மத்திய பிரதேசத்தில் ரயிலில் சென்றபோது, அவரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். பின்னர் அவர் ரயில் மூலமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பனிக்கம்பாளையம் பகுதியில் வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தள்ளார். போபால் நகர் பகுதியில் தண்டவாளத்தில் பிரத்திமா தாஸ் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், மத்திய பிரதேசம் போலீசாரிடம் ஜகான்கீர் ஜர்தார் மீது புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், ஜகான்கீர் ஜர்தார், தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் பிரத்திமா தாஸை ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்தது பெரிய வந்தது. 

perundurai

இது அடுத்து, தலைமறைவான ஜகான்கீர் ஜர்தாரை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, போலீசாரின் விசாரணையில் அவர் பெருந்துறையில் தங்கி கட்டிட வேலை செய்து வருவதும், உறவினர் ஒருவரிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததையும் கண்டுபிடித்தனர். தொடர்ந்து, மத்திய பிரதேச மாநில தனிப்பட்ட போலீசார், ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் ஆய்வாளர் ஆஷாம் பேகம், உதவி ஆய்வாளர் செந்தில் மற்றும் போலீசார் உதவியுடன் பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையத்தில் இருந்த ஜகான்கீர் ஜர்தாரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக மத்திய பிரதேசத்திற்கு அழைத்துச்சென்றனர். ஓடும் ரயிலில் கள்ளக்காதலியை தள்ளி கொலை செய்துவிட்டு 5 மாதமாக ஈரோட்டில் பதுங்கியிருந்த வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.