திருவாரூர் சேங்காலிபுரம் மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.5.28 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்!

 
tvr

திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.5.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் சேங்காலிபுரம் ஊராட்சியில் இன்று மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்து, சேங்காலிபுரம், அன்னவாசல், பெருமங்கலம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து, போதுமக்களிடையே பேசிய அவர், மக்கள் நேர்காணல் முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், நமது மாவட்டத்தை கல்வியில் மேம்பாடு அடைய செய்ய பெற்றோர்கள் குழந்தைகளை தவறாது பள்ளி அனுப்பி அவர்களது எதிர்காலத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும், பள்ளி குறித்த எந்தவித குறைபாடுகளையும் தங்களிடம் தெரிவித்தால் உடனடியாக அதனை சரிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்று கூறினார். 

tvr

தொடர்ந்து, இந்த முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 40 நபர்களுக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், 43 நபர்களுக்கு ரூ.4.30 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாவும், 3 நபர்களுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணை, 5 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.  மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 5 நபர்களுக்கு ரூ.17,516 மதிப்பிலான இலவச தையல் இயந்திரம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 நபருக்கு ரூ.8,758 மதிப்பிலான தையல் இயந்திரம், 4 நபர்களுக்கு ரூ.7,250 மதிப்பிலான தார் பாய், நெல் நுண்ணுட்டம் உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்கப்பட்டது.

இதேபோல், தோட்டக்கலைத்துறை சார்பில் 5 நபர்களுக்கு ரூ.24,526 மதிப்பிலான கத்தரி குழித்தட்டு நாற்று, கொய்யா நாற்று,  மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 106 பயனாளிகளுக்கு ரூ.5.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.