8 நாட்களாக நடந்து வந்த வேலை நிறுத்தம் வாபஸ்... ஈரோட்டில் 30 ஆயிரம் விசைத்தறிகள் மீண்டும் இயங்க தொடங்கின!

 
power looms

மத்திய கைத்தறி துறை அமைச்சர் உறுதி அளித்ததன் பேரில், ஈரோடு மாவட்டத்தில் 8 நாட்களுக்கு பின் நேற்று 30 ஆயிரம் விசைத்தறிகள் மீண்டும் இயங்க  தொடங்கின.

ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், மாணிக்கம் பாளையம், லக்காபுரம், சித்தோடு உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிவுகளில் ரயான் துணி உற்பத்தி நடந்து வருகிறது. மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சமீப நாட்களில் ரயான் துணிகளின் விலை குறைந்ததால், உற்பத்தி விலையை விட குறைவான விலைக்கு விற்பனையானது. இதனால் ரயான் துணி தயாரித்த விசைத்தறியாளர்களுக்கு மீட்டருக்கு ரூ.3 வரை நஷ்டம் ஏற்பட்டது. தொடர் நஷ்டத்தை அதனை சமாளிக்கும் பொருட்டு கடந்த 3ஆம் தேதி முதல் ரயான் துணி உற்பத்தியை நிறுத்தி, விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் விசைத்தறிகள் மூடப்பட்டன. இதனால் நாளொன்றுக்கு ரூ. 6 கோடி வர்த்தகம் முடங்கியது. வேலை நிறுத்தம் காரணமாக 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர். 8 நாட்களாக நீடித்த வேலைநிறுத்ததால் ரூ.48 கோடி அளவிலான வர்த்தகம் முடங்கியது. அத்துடன், 1.92 கோடி மீட்டர் ரயான் துணி உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய கைத்தறி துறை அமைச்சர் வேஷ்டி தயாரிப்பு ஆர்டர் வழங்குவதாக உறுதி அளித்ததை ஏற்று விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று கைவிட்டனர். 

power loom weavers

இது தொடர்பாக தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில அமைப்பு செயலாளர் கந்தவேல் கூறியதாவது:- ரயான் துணிக்கு மீட்டருக்கு ரூ.3 வரை நஷ்டம் ஏற்பட்டதால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. உற்பத்தி நிறுத்தப்பட்ட காலத்திலும் மீட்டருக்கு 25 காசுகள் மட்டுமே உயர்ந்தது. கடந்த 7ஆம் தேதி தமிழ்நாடு விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், மத்திய கைத்தறித்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். அப்போது, அரசின் இலவச வேட்டி, சேலை தயாரிப்பில், முதற்கட்டமாக வேட்டி தயாரிப்பு ஆர்டரை வழங்குவதாக அமைச்சர் உறுதி அளித்தார். இதனை ஏற்று, விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர், இவ்வாறு அவர் கூறினார்.  இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் 8 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் விசைத்தறிகள் செயல்பட தொடங்கியன.