தருமபுரி மாவட்டத்தில் நாளை 38-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்!

 
vaccine camp

தருமபுரி மாவட்டத்தில் நாளை அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் 1,928 சிறப்பு முகாம்களில் 38-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 1,928 சிறப்பு முகாம்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை 38 -வது “மெகா தடுப்பூசி முகாம்” நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் செப்.21 வரை நடைபெற்ற முகாம்கள் மற்றும் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 12 வயதுக்கு மேல் உள்ள 11.99 லட்சம் நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 10.80 லட்சம் நபர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசியும், 1,58,002 நபர்களுக்கு பூஸடர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

vaccine

நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை ஒட்டி  18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி 2022 ஜுலை 15 முதல் 75 நாட்களுக்கு இலவசமாக செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் அருகில் உள்ள சுகாதார மையங்களுக்கு சென்று தவறாமல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக, ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.