ஈரோட்டில் சொத்து தகராறில் விவசாயி அடித்துகொலை... மகன் வெறிச்செயல்!

 
murder

ஈரோட்டில் சொத்துக்களை எழுதித்தர மறுத்த தந்தையை மகன் கட்டையால் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் திண்டல் வேப்பம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் பழனிசாமி (68). விவசாயி. இவரது மனைவி ருக்குமணி. இவர்களுக்கு பிரியதர்ஷினி, ரவிக்குமார்(37) என 2 பிள்ளைகள் உள்ளனர். பிரியதர்ஷினிக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரியான ரவிகுமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், ரவிக்குமார் சொத்துக்களை தனது பெயரில் எழுதிவைக்க வேண்டுமென தந்தையிடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் பழனிசாமி மறுத்து விட்டார். 

dead body

இதனால் தந்தை மீது ரவிக்குமார் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.  இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சொத்து பிரச்சினை தொடர்பாக ரவிக்குமார் - பழனிசாமி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரவிக்குமார், வீட்டிலிருந்த கட்டையை எடுத்து பழனிசாமியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பழனிசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், ரவிக்குமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.இதனை தொடர்ந்து, பழனிசாமியை வீட்டில் இருந்த கட்டிலில் ருக்குமணி படுக்க வைத்துள்ளார். அதிகாலை 2 மணியளவில் சென்று பார்த்தபோது பழனிசாமி உயிரிழந்த நிலையில் கிடந்தார். 

இதுகுறித்து ருக்குமணி அளித்த தகவலின் பேரில் டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார், ஈரோடு தாலுகா போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவிக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து தகராறில் தந்தையை பெற்ற மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.