பெரம்பலூர் மாவட்டத்தில் 110 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற கோவில் திருவிழா!

 
perambalur

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் வ.களத்தூர் கிராமத்தில் 110 ஆண்டுகளுக்கு பின் நேற்று கோவில் ஊரணி பெங்கால் விழா விமரிசையாக நடைபெற்றது.
 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வ.களத்தூர் கிராமத்தில் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கடந்த 1912ஆம் ஆண்டு நடைபெற்ற திருவிழாவின்போது இந்து - இஸ்லாமிய சமூகத்தினர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 110 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட எஸ்பி மணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வி.களத்தூர் கிராமத்தை சேர்ந்த இந்து மற்றும் இஸ்லாமிய சமூகத்தினருடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, திருவிழாவின் போது எந்த வித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் இருக்க ஒத்துழைப்பு அளிப்பதாக இருதரப்பினரும் உறுதி அளித்தனர். 

perambalur

இதனை தொடர்ந்து, வ.களத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ஆடி மாத ஊரணி பொங்கல் விழா நேற்று ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா, மாவட்ட எஸ்பி மணி ஆகியோர் தலைமையில் துவங்கியது. இதில் கிராம மக்கள் கலந்துகொண்டு சுவாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. இதில் சமுதாய நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை போற்றும் விதமாக இஸ்லாமிய ஜமாத்தார் கலந்து கொண்டனர்.  இந்த திருவிழா வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நிறைவடைய உள்ளது.  இத்திருவிழாவில் கோட்டாட்சியர் நிறைமதி மற்றும் வேப்பந்தட்டை வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.