கவுந்தப்பாடி அருகே கோவில் உண்டியல் உடைப்பு... போலீஸ் சைரன் சத்தம் கேட்டதால் பணத்தை விட்டுச்சென்ற மர்ம கும்பல்!

 
robbery

ஈரோடு கவுந்தப்பாடி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம், நகைகளை திருடிய மர்மநபர்கள் போலீசார் ரோந்து சென்றதால், அவற்றை கோவில் வளாகத்திலேயே விட்டுச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே பெருந்தலையூர் வாணி ஆற்றங்கரையோரம் பழமை வாய்ந்த மகலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில், அதே பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் அர்ச்சகராக உள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு பூஜைகள் முடிந்து, அர்ச்சகர் சண்முகசுந்தரம் கோவில் நடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை 6 மணிக்கு அவர் கோவில் நடையை திறக்க சென்றபோது, மூலவர் பகுதியில் உள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் - நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது. 

kavundapadi

தகவல் அறிந்து வந்த கோவில் செயல் அலுவலர் ஸ்ரீதர், இது குறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில், காவல் ஆய்வாளர் சுபாஷ் தலைமையிலான போலீசார், கோவிலுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்தனர். போலீசாரின் சோதனையில் கோவில் வளாகத்தில் உள்ள சனீஸ்வரர் கோவில் பின்புறத்தில் 2 மூட்டைகள் மற்றும் ஆயுதங்கள் இருந்தன. மூட்டையை திறந்து பார்த்தபோது அதில் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் இருப்பது தெரியவந்தது. 

மகிலீஸ்வரர் கோவில் பகுதியில் தினமும் நள்ளிரவில் கவுந்தப்பாடி போலீசார் ரோந்து செல்வது வழக்கம். நேற்று நள்ளிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது போலீசாரின் சைரன் சத்தம் கேட்டு மாட்டி விடக்கூடாது என அச்சத்தில் கொள்ளையர்களை திருடிய பணம், நகைகளை விட்டு சென்றது தெரிய வந்தது. இது குறித்து புகாரின் அடிப்படையில் கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள், அந்த பகுதியில்  சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்