குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை... பெருந்துறையில் சோகம்!

 
poison

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் விஷ மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி  உள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வண்ணாம்பாறை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் சந்தியா (26). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். தம்பதியினர் இருவரும் பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தனர். இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் இருவரும் குழந்தை பிறப்புக்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். 

perundurai

இந்த நிலையில், சந்தியா குழந்தை இல்லாததால் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். அவருக்கு கணவர் காத்திக் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்துள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த சந்தியா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து விஷ மாத்திரை சாப்பிட்டுள்ளார். இதனை அடுத்து, வாந்தி ஏற்பட்டதால் குடும்பத்தினர் விசாரித்துள்ளனர். அப்போது, தான் விஷ மாத்திரையை சாப்பிட்டதை தெரிவித்தார். 

இதனை அடுத்து, குடும்பத்தினர் அவரை மீட்டு பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சந்தியாவின் தாய் கோகிலாம்பாள் அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.