திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டு 1.92 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு - ஆட்சியர் தகவல்!

 
tvr

திருவாரூர் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டில் 1.92 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பேசியதாவது, திருவாரூர் மாவட்டத்தில் 2022-23ஆம் ஆண்டில் குறுவை பருவத்தில் 36 ஆயிரம்  ஹெக்டேரிலும், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 1.46 லட்சம் ஹெக்டேரிலும், கோடை சாகுபடி 9500 ஹெக்டேரிலும் என 1.92 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், 2022-23ஆம் ஆண்டில்  உளுந்து 42 ஆயிரம் ஹெக்டேரிலும், பச்சைப்பயறு 44,900 ஹெக்டேரிலும்  ஆக மொத்தம் 86,900 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலக்கடலை 3 ஆயிரம் ஹெக்டேரிலும், எள் 2 ஆயிரம் ஹெக்டேரிலும் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பருத்தி 12, 500 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாத கணக்கீட்டின்படி, வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், தனியார், கிடங்கு மற்றும் மொத்த உர விற்பனையாளர்களிடம் கையிருப்பாக யூரியா 2975 மெ.டன்னும், டிஏபி 573 மெ.டன்னும், பொட்டாஷ் 800 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 1,696 மெ.டன்னும் உள்ளது.

tvr

மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துக்களிலும் மே 1 வரை பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தின் கீழ் பயனடைந்த விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்கும் முகாம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் அதிவிரைவு முனைப்பு இயக்கமும் நடைபெற்று வருகிறது. இதுவரை விவசாய கடன் அட்டை பெறாத பிஎம் கிசான் திட்ட பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்கப்படும்.  பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் கிராம பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இதற்கான விண்ணப்பங்களை பெறலாம்.

திருவாருர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், மற்றும் வடிகால்களை துர்வாரும் திட்டத்தின் கீழ் 115 பணிகள் எடுக்கப்பட்டு துர்வாரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பணிகள் நடைபெறும் இடங்களில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் அவை அகற்றப்பட்டு, பணிகள் தொடர்ந்து நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்தார்.