நாளை தை அமாவாசை - ராமேஸ்வரத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்!

 
rameshwaram

நாளை தை அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இன்று மதியம் முதல் நாளை இரவு வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. 

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தெரிவித்துள்ளதாவது:- ராமேஸ்வரம் நகருக்குள் வரும் வாகனங்கள் பேருந்து நிலையத்தில் இருந்து சிவகாமி நகர், சல்லிமலை, இரட்டைப்பிள்ளையார் கோயில் தெரு, சவுந்தரியம்மன் கோயில் தெரு, சம்பை, மாங்காடு ரோடு வழியாக நகராட்சி, 3.3, கோயில் வாகன நிறுத்தம் செல்ல வேண்டும். வாகன நிறுத்தம் பகுதிகளில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் மேல வாசல் வழியாக திட்டக்குடி வந்து, கோயில் காவல் நிலையம், பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும்.

ramnad SP thangathurai

வாகன நிறுத்த பகுதிகளில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வாகனங்கள் மேல வாசல் வழியாக திட்டக்குடி வந்து, தேவர் சிலை, ரயில்வே பீடர் ரோடு வழியாக செல்ல வேண்டும். தனுஷ்கோடியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் தேவர் சிலை, ரயில்வே பீடர் ரோடு, நகர் காவல் நிலையம், பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும். ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் வரை சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவோர், பாம்பன் சாலை பாலத்தில் வாகனங்களை நிறுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தை அமாவாசை பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலீசார் ஈடுபட உள்னர். குற்றச் சம்பவங்களை தவிர்க்கும் விதமாக முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.