சாலையில் கிடந்த 12 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த டாஸ்மாக் ஊழியர்... திண்டுக்கல் எஸ்பி பாராட்டு!

 
dgl

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சாலையில் கிடந்த 12 சவரன் தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த டாஸ்மாக் ஊழியருக்கு, எஸ்பி பாஸ்கரன் பாராட்டு தெரிவித்தார். 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் மகன் கார்த்திக்(48). டாஸ்மாக் ஊழியரான இவர், வத்தலகுண்டு திமுக மாவட்ட பிரதிநிதியாகவும் உள்ளார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வத்தலக்குண்டுவில் இருந்து பழைய வத்தலக்குண்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். பழைய வத்தலக்குண்டு சாலையில் கலைஞர் காலனி அருகே சென்றபோது சாலையில் கேட்பாரற்ற நிலையில் கட்டப்பை ஒன்று கிடந்தது.

dgl

இதனால் கார்த்திக் அதனை எடுத்து பார்த்தபோது, அந்த பையில் 12 சவரனிலான தங்க நெக்லஸும், ஒரு ஜோடி தோடும் ரசீதுடன் இருந்தது. அப்போது, அதனை உரியவரிடம் ஒப்படைக்க முடிவெடுத்த கார்த்தி, அந்த நகைகளை வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் பரமேஸ்வரன் ஆகியோரிடம் ஒப்படைத்தார். இதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த நகை கட்டக்காமன்பட்டியை சேர்ந்த கெளதம் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது.

மேலும், கௌதம் மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள கடையில் 12 சவரன் நகை வாங்கியதும், பின்னர் வத்தகுண்டுக்கு திரும்பிய அவர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றபோது நகை இருந்த கட்டப்பை தவறி விழுந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் கௌதமை நேரில் அழைத்து, அவரிடம் நகையை ஒப்படைத்து அறிவுரை கூறினர். ரூ.4 லட்சம் நகையை நேர்மையுடன் போலீசாரிடம் ஒப்படைத்த கார்த்திக்கிற்கு, திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் சால்வை அணிவித்து, பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.