திருச்செந்தூரில் நள்ளிரவில் நடைபெற்ற சுவாமி - அம்பாள் திருக்கல்யாண வைபவம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

 
tiruchendur

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று நள்ளிரவு திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்

முருகப் பெருமானின் 2ஆம் படை வீடான  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கி நடை பெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை கோவில் கடற்கரையில் நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி, நேற்று அதிகாலை 5 மணி அளவில் கோவிலிலிருந்து அம்பாள் சப்பரத்தில் காட்சி மண்டபத்துக்கு புறப்பட்டு வந்தார்.

tiruchendur

அங்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, நேற்று மாலை சுவாமி திருவிடங்க பெருமான் கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி ஊர்வலமாக கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் தெய்வானை அம்மனுக்கு காட்சியளித்தார்.  சுவாமிக்கும், அம்மனுக்கும் தோள் மாலை மாற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  

tiruchendur

தொடர்ந்து நள்ளிரவு கோயில் வளாகத்தில் உள்ள ராஜகோபுரம் வாசல் முன்பு சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்கள் மொய் எழுதி,  பிரசாதங்களை பெற்றுச் சென்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்கா குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கோயில் நிர்வாக அதிகாரிகள் செய்துள்ளனர்.