திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி... லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

 
tiruchendur

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. இதனையொட்டி தினமும் யாகசாலை பூஜையும், தீபாராதனையும், தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை கோவில் கடற்கரையில் நடைபெற்றது. இதனையொட்டி, இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், உதயமர்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி ஜெயந்தி நாதருக்கு யாக சாலை பூஜைக்கு பின் அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 

tiruchendur

தொடர்ந்து பிற்பகல் சுவாமி, வள்ளி,தெய்வானை அம்பாளுடன் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  பிற்பகல் 2 மணி அளவில் திருவாடுதுறை சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளி, அங்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.  மாலை 4 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரனை வதம் செய்வதற்காக கடற்கரைக்கு எழுந்தருளினார். முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனையும், 2-வதாக சிங்கமுகம் கொண்ட சிங்க பத்மனையும், 3-வதாக தன்முகம் கொண்ட  சூரபத்மனையும் தனது வேலால் வதம் செய்தார்.  தொடர்ந்து, 4-வதாக மாமரமாகவும், சேவலாகவும் வந்த சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வை லட்சக்கணக்கான பக்தர்கள் விண்வரை அரோகரா கோசம எழுப்பி சூரசம்காரன் நிகழ்வை கண்டனர். 

பக்தர்களின் பாதுகாப்பு கருதி 7 எஸ்பி-க்கள், 3 கூடுதல் எஸ்பி-க்கள் மேற்பார்வையில் 32  ஏடிஎஸ்பிக்கள் மற்றும் டிஎஸ்பி-க்கள், 71 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன், இந்து சமய அறநிலைத்துறை செயலாளர் சந்திரமோகன்,  ஆணையர் குமர குருபரன், திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.