பிரம்மாண்ட மேடையில் செஸ் உருவங்களை போல நகர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்!

 
chess

திருப்பூர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செஸ் மேடையில் மாணவ, மாணவிகள் செஸ் உருவங்களை போன்று தங்களை மாற்றிக்கொண்டு, செஸ் விளையாடி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக,  திருப்பூர் மாவட்டம் பழங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் இன்று செஸ்போர்டு வடிவில் மாணவர்கள் நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  

chess

இதன்படி, பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செஸ் மேடையில் கருப்பு மற்றும் வெள்ளை நிற ஆடை அணிந்த மாணவர்கள் சிப்பாய், குதிரை, யானை, ராஜா, ராணி செஸ் உருவங்களாக தங்களை சித்தரித்துக்கொண்டனர்.  தொடர்ந்து, செஸ் விளையாட்டின் விதிமுறைகள் படி கருப்பு, வெள்ளை கட்டங்களில் ஒவ்வொருவராக நகர்ந்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.