ஈரோட்டில் மாநகராட்சி அலுவலர் சங்க கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம்!

 
erode

ஈரோட்டில் தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஈரோட்டில் தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு பொருளாளர் சோமசுந்தரம், வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சீத்தாராமன், கவுரவ தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இந்த கூட்டத்தில் மாநகராட்சி பணியாளர்களை அரசு ஊழியராக தமிழக அரசு அறிவிக்கவும், அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும்,  மாநகராட்சிகளில் தற்போதுள்ள சிங்கிள் யூனிட் நிலையே தொடர வேண்டும் என்றும், மாநகராட்சிகளுக்கு என தனி இயக்குநரகம் அமைக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

erode

இதேபோல், பணி விதிகளில் கூறியவாறு நகராட்சி, மாநகராட்சிகளில்  ஏப்ரல் 1ஆம் தேதியை குறியீட்டு நாளாக கொண்டு அனைத்து பணியிடங்களும் நிரப்ப வேண்டும் என்றும்,  அரசாணை எண் 53ல் கூறியவாறே, அந்தந்த மாநகராட்சி ஆணையாளர்களே தடையின்மை சான்று வழங்குவதை அமல்படுத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மாநகராட்சிகளில் தற்போது உள்ள இணை இயக்குநர் நிலையினை பணியிடங்களை தரம் உயர்த்தி கூடுதல் இயக்குநர் அந்தஸ்தில் மாநகராட்சி ஆணையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்த செயற்குழு கூட்டத்தில், மாநகராட்சி அலுவலர் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவராக ராதாகிருஷ்ணன், மாநில பொது செயலாளர்களாக  இரா.சீத்தாராமன் மற்றும் சாகுல் ஹமீது, மாநில பொருளாளராக ராமச்சந்திரன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் அமைச்சுப் பணியாளர் சங்க தலைவர் சரோஜா தேவி, மாநில செயற்குழு கூட்டத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு நன்றி கூறினார்.