ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.55 லட்சம் வசூல்!

 
srirangam hundial

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.55 லட்சம் ரொக்கப்பணம், 135 கிராம் தங்கம் மற்றும் முக்கால் கிலோ வெள்ளி ஆகியவை கிடைக்கப்பெற்றன.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலமாகவும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் சிறப்புக்கு உரியது. இங்கு தமிழகம் மட்டும் இன்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமியை தரிசித்து செல்வர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியல் காணிக்கை மற்றும் தங்கம், வெள்ளி பொருட்களை அளிப்பது வழக்கம்.பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது.

srirangam

 அதன்படி, செப்டம்பர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில், கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியம், மேலாளர் தமிழ்செல்வி ஆகியோர் மேற்பார்வையில் கோயில் ஊழியர்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் என  ஏராளமானோர் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இறுதியில் உண்டியல் காணிக்கையாக 55 லட்சத்து 9 ஆயிரத்து 921 ரூபாய் ரொக்கப்பணம் வசூலானது. மேலும், 135 கிராம தங்கம், 855 கிராம் வெள்ளி மற்றும் 250 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதாக கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தகவல் தெரிவித்துள்ளார்.