ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.63 கோடி வசூல்!

 
srirangam

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 63 லட்சம் ரொக்கப்பணம், 183 கிராம் தங்கம் மற்றும் 4 கிலோ வெள்ளி ஆகியவை கிடைக்கப்பெற்றன.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் சிறப்புக்குரியது. இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நம்பெருமாளை தரிசித்து செல்வார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது. 

srirangam

அதன்படி, ஜனவரி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது. இதில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள், வங்கி ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். காணிக்கை எண்ணும் பணி கோவில் இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டது. இதில் கோவில் மாதாந்திர உண்டியல்கள் மற்றும் வைகுண்ட ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. 

அப்போது, மாதாந்திர உண்டியல்களில் ரூ.1 கோடியே, 46 லட்சத்து, 45 ஆயிரத்து 100-ம்,ஸ்ரீவாரி உண்டியல் மூலம் ரூ.11 லட்சத்து, 43 ஆயிரத்து 869-ம், வைகுண்ட ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் மூலம் ரூ.5 லட்சத்து, 14 ஆயிரத்து 664-ம் என மொத்தம் ரூ. 1 கோடியே, 63 லட்சத்து, 3 ஆயிரத்து, 633 கிடைக்கப்பெற்றது. மேலும், 183 கிராம் தங்கம், 4 கிலோ 642 கிராம் வெள்ளி மற்றும் 487 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கிடைக்கப்பெற்றது. முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு வைகுண்ட ஏகாதசியின்பாது ரூ.1.16 கோடி காணிக்கையாக கிடைக்கப்பெற்றதே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.