ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சென்ற ஹெலிகாப்டர் கடம்பூர் மலைப்பகுதியில் அவசரமாக தரையிறக்கம்!

 
helicopter

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சென்ற ஹெலிகாப்டர் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இன்று காலை கர்நாடக மாநிலம் பெங்ளுருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் ஹெலிகாப்டர் ஓட்டுநர் உள்பட 5 பேர் பயணம் செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது, அங்கு மோசமான வானிலை நிலவியதால், ஹெலிகாப்டரை ஓட்டுநர் அவசரமாக தரையிறக்க முயன்றார்.

ravisankar

காலை 10.30 மணி அளவில் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள உக்கினியம் கிராம அரசுப் பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கிராமத்தில் ஹெலிகாப்டர் திடீரென தரை இறங்கியதை அறிந்த அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து ஹெலிகாப்டரை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். சிறிது நேரத்துக்கு பின்னர் காலை 11.10 மணி அளவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட அனைவரும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.