"கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு என தவறான தகவல் பரவல்" - நாமக்கல் ஆட்சியர் எச்சரிக்கை!

 
namakkal

கூட்டுறவு சங்கங்களில் மேலாளர், துணை மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல் உண்மை இல்லை என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கூட்டுறவு சங்கங்களின் மூலம் மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ரூ.18,000/- லிருந்து 25,000/- வரை சம்பளத்துடன் சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில்  உள்ள வங்கிகளில் பணியிடங்கள் வழங்கப்படும் என்றும் இதற்காக பிணை வைப்புத்தொகை (Security Deposit) ரூ. 1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை செலுத்தினால் வேலை கிடைக்கும் என்று வாட்ஸ் அப் வழியாகவும், சமூக வலைதளம் வழியாகவும் அவதுறு செய்திகள் பரவி வருகின்றது.

namakkal

கூட்டுறவுத்துறை மூலம் மேற்படி பணியிடங்கள் வழங்குவதற்கான அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. பொதுமக்கள் இந்த பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், பிணை வைப்புத்தொகை (Security Deposit) என்ற பெயரில் தொகையினை செலுத்தி ஏமாற வேண்டாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இது குறித்து தவறான செய்திகளை பரப்புவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுவதாக, ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.