ஈரோட்டில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி துவக்கம்!

 
disabled

ஈரோட்டில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவ - மாணவிகளுக்கான விளையாட்டு போட்டியை, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி துவங்கி வைத்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஈரோடு மாவட்ட பிரிவு சார்பில் நேற்று மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.  ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடந்த இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி துவங்கி வைத்தார். இதில் பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் காது கேளாதோருக்கான குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டி நடந்தது. குழு விளையாட்டு போட்டிகளான இறகு பந்து, மேசை பந்து, கையுந்து பந்து, எறிபந்து மற்றும் கபடி ஆகிய போட்டிகள் நடைபெற்றது. கை - கால் ஊனமுற்றோருக்கான  தடகள போட்டிகளில் கால் ஊனமுற்றோருக்கு 50 மீட்டர் ஓட்ட மும், கை ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் ஓட்ட மும், குள்ளமானோருக்கு 50 மீட்டர் ஓட்டமும், கால் ஊனமுற்றோருக்கு குண்டு எறிதல் போட்டியும், இரு கால்  ஊனமுற்றோருக்கு 100 மீ சக்கர நாற்காலி போட்டியும் நடந்தது.

disabled

அதேபோல், பார்வையற்றோருக்கான தடகள போட்டியில் முற்றிலும் பார்வையற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டமும், மிகக் குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீட்டர் ஓட்ட மும் நின்றநிலை தாண்டுதல் மற்றும் மெது பந்து போட்டியும், முற்றிலும் பார்வையற்றோருக்கு குண்டு எறிதல் போட்டியும் நடந்தது. மனநிலை பாதிக்கப்பட்டோருக்கான போட்டியில் ஐக்யூ தன்மை முற்றிலும் இல்லாதவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், மெது பந்து எறிதல் போட்டியும், நின்ற நிலையில் தாண்டுதல் போட்டியும், ஐ க்யூ தன்மை நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு 100 மீட்டர் ஓட்ட மும் குண்டு எறிதல் போட்டியும் நடந்தது. 

போட்டியில் மாவட்ட அளவில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவ -மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. முன்னதாக  50 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு நல அலுவலர் சதீஷ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதை செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.