வாலாஜாபாத் வேடல் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்; 342 பயனாளிகளுக்கு ரூ.2.51 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

 
kanchi

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் வேடல் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாம் நிகழ்ச்சியில் 342 பயனாளிகளுக்கு  ரூ.2.51 கோடி மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் வேடல் கிராமத்தில் நேற்று மனுநீதி நாள் முகாம், ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.  இந்த முகாமில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்துறை, தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து, துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.

மனு நீதி நாள் முகாம் நடைபெறுவதை முன்னிட்டு கடந்த 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் முகாமிட்டு  பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை பரிசீலனை செய்து,மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் 13 பேருக்கும், வருவாய் துறை சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா 90 பேருக்கும், முதியோர் ஓய்வூதியம் 24 பேருக்கும், மின்னணு குடும்ப அட்டை 10 பேருக்கும் வழங்கப்பட்டது.

kanchi

இதேபோல், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தனிநபர் இல்ல கழிப்பறை 3பேருக்கும்,  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில்  சலவைப்பெட்டி 10 நபர்களுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தையல் இயந்திரம் 3 நபர்களுக்கும், தொழில்துறை சார்பில்  சிறுதொழில் கடன் 3 பேருக்கும்,  வேளாண்துறை சார்பில் உரம், விதைகள் 3 நபர்களுக்கும், எண்ணெய் இயந்திரம் ஒருவருக்கும் கூட்டுறவுத்துறை மூலம் மகளிர் சுய உதவிக்குழுக் கடன் 168 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

மேலும், இந்த முகாமில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு காசநோய் முகாம், கொரோனா தடுப்பூசி முகாம், சிறப்பு கண் பரிசோதனை முகாம் உள்ளிட்ட முகாம்களும் நடைபெற்றன. இந்த முகாமில் உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.