திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் பலி!

 
suriyur

திருச்சி மாவட்டம் பெரிய சூரியரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பார்வையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமம் நற்கடல் குடிகருப்பண்ண சுவாமி கோயில் திருவிழாவையொட்டி, இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த 600 காளைகளும், 400 மாடிபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இதனை அடுத்து வாடிசாலில் இருந்து கோயில் காளையும், தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை, மாடுபிடி வீரர்கள் தீரமுடன் அடக்க முயன்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு களித்தனர். 

dead body

இந்த நிலையில், போட்டியை காண வந்திருந்தி புதுக்கோட்டை மாவட்டம் கண்ணகோன்பட்டி பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற 25 வயது இளைஞரை, மாடுபிடிக்கும் பகுதியில் காளை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவருக்கு மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.  மேலும், சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது வரை 400 காளைகள் அவிழ்த்து விட்டப்பட்டுள்ள நிலையில், 140 மாடுபிடி வீரர்கள் களம்கண்டுள்ளனர்.  இதில் 10 மாடுகளை பிடித்தது, பெரிய சூரியூரை சேர்ந்த பூபாலன் முதலிடத்திலும், 9 காளைகளை பிடித்து திருவெறும்பூரை சேர்ந்த மாரி 2ஆம் இடத்திலும் உள்ளனர். காளைகள் முட்டியதில் 32 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.