புளியங்குடியில் கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது... 2 கிலோ கஞ்சா, ரூ.1.41 லட்சம் பணம் உள்ளிட்டவை பறிமுதல்!

 
tenkasi

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கும்பலை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா,  2 அரிவாள்கள், ரூ.1.41 லட்சம் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, புளியங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை புளியங்குடி தம்பிரான்குளம் பகுதியில் ஒரு கும்பல் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு கஞ்சாவை பொட்டலம் போட்டுக்கொண்டிருந்த 6 பேரை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

knife

அதில் அவர்கள் வாசுதேவநல்லூர் உள்ளார் பகுதியை சேர்ந்த காசிதுரை(22), சுண்டங்காடு பகுதியை சேர்ந்த மருதுபாண்டி(24), கிருபாகரன்(28), விக்னேஷ்(20), ராஜேஷ்(22), திருப்பதி(48) ஆகியோர் என்பது தெரிய வந்தது.  இதனை அடுத்து, 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான 2 கிலோ கஞ்சா, 2 அரிவாள்கள், ரூ.1.41 லட்சம் பணம், 5 செல்போன்கள், ஆட்டோ மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தப்பியோடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.