சிவன்மலை ஆண்டவர் உத்தரவு : இளநீர், தென்னை ஈக்குமாறு வைத்து சிறப்பு பூஜை!

 
sivanmalai

திருப்பூர் மாவட்டம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று இளநீர் மற்றும் தென்னை ஈக்குமாறு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன் மலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிறப்பு அம்சமாக ஆண்டவர் உத்தரவு என்ற வழக்கம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சிவன்மலை முருகன், தனது பக்தரின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்யுமாறு உத்தர விடுவதாக நம்பப்படுகிறது. முருகன் கூறிய பொருளை, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமியிடம் வைத்து பூஜை செய்து, பின்னர் மூலவர் அறைக்கு முன்புள்ள கண்ணாடி பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படும். இறைவன் மீண்டும் மற்றொரு பக்தரின் கனவில் தோன்றி வேறு பொருளை தெரிவிக்கும் வரை அந்த பொருள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

sivanmalai

முன்னதாக கடந்த மாதம் 6ஆம் தேதி  வேல் வைத்து பூஜை செய்யப்பட்டு, பக்தர்களின் பார்வைக்காக கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை திருப்பூர் மாவட்டம் மங்களப்பட்டியை சேர்ந்த  குமாரசாமி என்ற பக்தரின் கனவில் வந்ததாக, நேற்று கோவிலில் இளநீர், தென்னை ஈக்குமாறு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, கண்ணாடி பெட்டிக்குள் இருந்த வேல் எடுக்கப்பட்டு, இளநீர் மற்றும் தென்னை ஈக்குமாறு பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது.