சிவன்மலை ஆண்டவர் உத்தரவு - நெற்கதிர் வைத்து சிறப்பு வழிபாடு!

 
sivanmalai

திருப்பூர் மாவட்டம் சிவன்மலை முருகன் கோவிலில் இன்று நெற்கதிர்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிறப்பு அம்சமாக ஆண்டவன் உத்தரவு என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, முருக பெருமான் பக்தர்களின் கனவில் தோன்றி தெரிவிக்கும் பொருளை, சுவாமிக்கு வைத்து பூஜை செய்து, மூலவர் அறைக்கு முன்பு தூணில் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படும். கடைசியாக கடந்த நவம்பர் 10ஆம் தேதி பக்தரின் கனவில் தோன்றியதாக இளநீர் மற்றும் தென்னை ஈக்குமாறு வைத்து பூஜை செய்து, கண்ணாடி பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. 

sivanmalai

இந்த நிலையில், காங்கேயம் அருகே உள்ள காடையூரை சேர்ந்த பெண் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றியதாக இன்று சுப்பிரமணிய சுவாமிக்கு நெற்கதிர்கள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, கண்ணாடி பெட்டிக்குள் இருந்த இளநீர், ஈக்குமாறு ஆகியவை அகற்றப்பட்டு, நெற்கதிர்கள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை நாளை நடைபெற உள்ள நிலையில், ஆண்டவர் உத்தரவு பெட்டியில் நெற்கதிர்கள் வைக்கப்பட்டு உள்ளதால், நடப்பாண்டு விவசாயம் செழிக்கும் என பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.