தம்பி இறந்த துக்கத்தில் அக்கா மயங்கி விழுந்து பலி... குமரி அருகே சோகம்!

 
dead

கன்னியாகுமரி அருகே புற்றுநோயால் தம்பி உயிரிழந்ததால் வேதனையில் அக்கா மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள பறையன்விளை பகுதியை சேர்ந்தவர் முகமது காஜா. இவரது மனைவி செய்யது அலி பாத்திமா(32). இத்தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். செய்யது அலி பாத்திமாவின் தம்பி பயாஸ் அகமது என்பவர் திருச்சியில் வசித்து வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் செய்யது அலி பாத்திமா, தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் திருச்சியில் தங்கி, பயாஸ் அகமதுவை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பயாஸ் அகமது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

kumari

இதனை அடுத்து, அவரது உடல் சொந்த ஊரான குமரி மாவட்டம் பறையன்விளைக்கு கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. தம்பியின்  மீது அதிக அன்பு கொண்டிருந்த செய்யது அலி பாத்திமா, அவரது மறைவால் மன வேதனையுடன் காணப்பட்டு வந்துள்ளார்.  இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் திடீரென அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தம்பி இறந்த வேதனையில் அக்கா மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.