வேலூரில் போலீஸ் மோப்ப நாய் சிம்பா உயிரிழப்பு... எஸ்பி ராஜேஸ் கண்ணன் நேரில் அஞ்சலி!

 
sniffer dog

வேலூர் மாவட்ட துப்பறியும் நாய் படை பிரிவில் பணிபுரிந்த மோப்பநாய் சிம்பா உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தது. 

வேலூர் மாவட்ட காவல்துறையில் துப்பறியும் நாய் படை பிரிவில் சிம்பா என்ற மோப்பநாய் கடந்த 10 வருடங்களாக பணிபுரிந்து வந்தது. கடந்த 2013ஆம் ஆண்டு 3 மாத குட்டியாக துப்பறியும் நாய் படை பிரிவில் சேர்க்கப்பட்ட மோப்ப நாய் சிம்பா, 250 கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா வழக்குகளில் திறம்பட செயல்புரிந்து, குற்றவாளிகளை கைது செய்ய உதவு புரிந்துள்ளது. 

Sniffer Dog

ஓய்விற்கு பின்னர் சிம்பா, மோப்பநாய் பிரிவில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிம்பாவிற்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து, வேலூர் கால்நடை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு மருத்துவ பரிசோதனையில் மோப்ப நாய் சிம்பாவிற்கு  புற்று நோய் பாதிப்பு உள்ளது தெரிய வந்தது. இதற்காக சிம்பாவிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று காலை 10 மணி அளவில் மோப்பநாய் சிம்பா பரிதாபமாக உயிரிழந்தது. 

இதனை அடுத்து, மோப்ப நாய் சிம்பா காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு மோப்ப நாய் சிம்பாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பி மனோகரன், ராமஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.