கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு... குடியாத்தம் அருகே சோகம்!

 
gudiyatham

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கௌதம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (65). இவரது மனைவி அஞ்சலி (60). இத்தம்பதிக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில், உடல் நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த சேகர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இதனை அடுத்து, சனிக்கிழமை காலை அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்த உறவினர்கள் ஏற்பாடு செய்து வந்தனர். கணவர் மீது அதிக அன்பு வைத்திருந்த அஞ்சலி அவரது உடலின் அருகே அமர்ந்து அழுதுகொண்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

gudiyatham

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அஞ்சலியை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து, கணவன் - மனைவி இருவரது உடல்களுக்கும் ஒன்றாக இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தம்பதியினர் இறப்பிலும் இணை பிரியாமல் இருந்தது அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.