உணவகங்களில் சேவைக்கட்டணம் வசூலிக்கக் கூடாது - விருதுநகர் ஆட்சியர்!

 
virudhunagar

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சேவைக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குப்பில், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA)பிரிவு 18(2) (1)-ன் கீழ் முறையற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் நுகர்வோர் நலன்களை பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்கள் அமலுக்கு வந்தள்ளதாகவும், அதன்படி ஹோட்டல்கள் அல்லது உணவகங்கள் உணவு கட்டணத்தில் தானாகவோ அல்லது இயல்பாகவோ சேவைக்கட்டணத்தை சேர்க்கக்கூடாது. சேவைக்கட்டணத்தை வேறு பெயரில் வசூலிக்கக்கூடாது.

எந்த ஒரு ஹோட்டலும் அல்லது உணவகமும் ஒரு நுகர்வோரை சேவைக்கட்டணத்தை செலுத்தும்படி கட்டாயப்படுத்தக்கூடாது. மேலும், சேவைக்கட்டணம் என்பது நுகர்வோரின் தன்னார்வமானது மற்றும் விருப்பமானது. அது நுகர்வோரின் விருப்பப்படி என்பதை நுகர்வோர் தெளிவாக தெரிவிக்க வேண்டும்.வழிகாட்டுதல்களை மீறி ஒரு ஹோட்டல் அல்லது உணவகம் சேவைக்கட்டணம் வசூலிப்பதாக ஏதேனும் நுகர்வோர் அறிந்தால் அந்த நுகர்வோர் தன் பில் தொகையிலிருந்து சேவைக்கட்டணத்தை நீக்குமாறு சம்பந்தப்பட்ட ஹோட்டல் அல்லது உணவகத்திற்கு கோரிக்கை விடுக்கலாம்.

hotels

இதுகுறித்து தேசிய நுகர்வோர் ஹெல்ப் லைனில் புகார் அளிக்கலாம். 1915 என்ற எண்ணில் தொடர்பு  கொள்ளலாம். மேலும், புகாரின் விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுக்காக e-daakhil போர்ட்டல் www.edaakhil.nic.in மூலமாகவும் மின்னணு முறையில் புகார் அளிக்கலாம். ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் வழிகாட்டுதல்களை மீறும் பட்சத்தில் நுகர்வோர் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடம் விசாரணைக்காக ஆவணங்களுடன் எழுத்துப்பூர்வமாக அல்லது மின்னணு முறையிலோ சமர்ப்பிக்கலாம். இதனை புதுதில்லியில் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையகத்துக்கும் அனுப்பலாம் என ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.