பெருந்துறையில் பெண் பயணிகளிடம் தொடர் அத்துமீறல்... எம்எல்ஏ நடவடிக்கையால் தனியார் பேருந்து நடத்துனர் கைது!

 
arrest

பெருந்துறையில் பெண் பயணிகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட தனியார் பேருந்து நடத்துனரை எம்எல்ஏ ஜெயக்குமார் நடவடிக்கையின் பேரில் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் பேருந்தில் செல்லும் பெண்களிடம் தனியார் பேருந்து நடத்துனர்கள் ஒரு சிலர் தரம் தாழ்ந்த வார்த்தைகளை பேசுவதாகவும், பெண்களை காலால் உதைப்பதாகவும் பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமாரிடம், சரளை பகுதியை சேர்ந்த பெண்கள் முறையிட்டனர். இந்த விவகாரம் குறித்து நேற்று மதியம் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணியை சந்தித்து எம்எல்ஏ ஜெயக்குமார் புகார் அளித்திருந்தார். தொடர்ந்து, நேற்று மாலை பெருந்துறையில் இருந்து திருப்பூர் சென்ற தனியார் பேருந்து ஒன்றில், நடத்துனர் ஒருவர் கூட்டமாக இருந்த பெண்கள் பகுதியில் காலால் உதைத்து பெண்களை உள்ளே போக சொல்லியதாக கூறப்படுகிறது.

jayakumar

இது குறித்து தகவல் அறிந்த உடன் எம்எல்ஏ ஜெயக்குமார் ,சரளை பகுதி பொது மக்களோடு, அதே பேருந்து திருப்பூரில் இருந்து திரும்பி வரும்போது சரளையில் நிறுத்தி விசாரித்தார். அப்போது, நடத்துடனர் பெண்களை காலால் எட்டி உதைத்து, உள்ளே போகச் சொன்னது உண்மை என தெரிய வந்ததால், பெருந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் தனிப்பிரிவு போலீசார் சுந்தரம் ஆகியோர், நடத்துனர் ஹரிஹரனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

பின்னர் மாற்று நடத்துனர் மூலம் தனியார் பேருந்து உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. மதியம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்த நிலையில், மாலையில் மீண்டும் இதே புகார் வந்ததால் எம்எல்ஏ நேரடியாக களமிறங்கி நடத்துனரை கைதுசெய்து வைத்தது அப்பகுதி பெண்களை நிம்மதி அடைய வைத்தது.