தா.பழூர் அருகே குட்கா விற்பனை செய்த மளிகைக்கடைக்கு சீல்வைப்பு... ஆட்சியர் ரமண சரஸ்வதி நடவடிக்கை!

 
ariya

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே மளிகைக்கடையில் திடீர் ஆய்வு நடத்திய ஆட்சியர் ரமண சரஸ்வதி, அங்கு குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டதால் கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். 

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய பகுதிகளில் நேற்று ஆட்சியர் ரமண சரஸ்வதி ஆய்வு பணிக்கு சென்றிருந்தார். இந்த ஆய்வின்போது, தா.பழுர் அடுத்த கோடங்குடி கிராமத்தில் உள்ள மளிகைக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆட்சியர் ரமண சரஸ்வதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கடையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து, அந்த கடைக்கு சீல் வைக்க ஆட்சியர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டார்.

collector ariyalur

இதனை தொடர்ந்து, வருவாய் துறை அதிகாரிகள்,அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர். இது குறித்து பேசிய ஆட்சியர் ரமண சரஸ்வதி, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.