தஞ்சையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 110 கடைகளுக்கு சீல் வைப்பு - ஆட்சியர் நடவடிக்கை!

 
thanjavur

தஞ்சாவூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 110 கடைகளுக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி அமைந்துள்ள பகுதிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கடைகளில் மளிகை கடை, பெட்டிக்கடைகளில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மாவட்டம் முழுவதும் 110 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதுகுறித்து விளக்கம் கோரி சம்பந்தப்பட்ட கடைகளுக்கு மாவட்ட நிரவாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் கடை உரிமையாளர்கள் முறையாக பதில் அளிக்காததால்  110 கடைகளையும்  பூட்டி சீல்வைக்க மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.

thanjavur collector

தொடர்ந்து, நேற்று தஞ்சை நகர் பகுதியில் 11 கடைகளுக்கும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் 99 கடைகளுக்கும் அதிகாரிகள் பூட்டி சீல்வைத்தனர். தஞ்சை வடக்கு வீதியில் உள்ள 2 கடைகளுக்கு ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட எஸ்பி ரவுளிபிரியா முன்னிலையில் வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.  இது குறித்து பேசிய ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூர் மாவட்டத்தின் அனைத்து கடைகளிலும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கடையை பூட்டி சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்தார்.