திண்டுக்கல்லில் சாலை விபத்தில் பள்ளி மாணவர் பலி... விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியல்!

 
dgl

திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாணவரின் உறவினர்கள அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திண்டுக்கல் நந்திகோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஆறுமுகம். இவரது மூத்த மகன் கதிரவன் (17). இவர் சின்னாளபட்டி பகுதியில் உள்ள ஆதி திராவிட விடுதியில் தங்கி, அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கதிரவன், தன்னுடன் விடுதியில் தங்கியுள்ள தினேஷ்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார். அவர்களுடன் வெள்ளோடு பகுதியை சேர்ந்த ஸ்டெல்லா மேரி என்பவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ஏ. வெள்ளோடு பிரிவு அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி விபத்திற்குள்ளானது. இதில் கதிரவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த தினேஷ்குமார் மதுரை அரசு மருத்துவமனையிலும், ஸ்டெல்லா மேரி திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

dead

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் டவுன் போலீசார் விபத்தில் பலியான கதிரவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, மாணவர் இறந்த தகவலை விடுதி காப்பாளர் தாமதமாக கதிரவனின் பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், இரவு நேரத்தில் மாணவரை வெளியே செல்ல அனுமதித்த  அரசு விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இந்த விவகாரத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக திண்டுக்கல் - திருச்சி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.