எட்டயபுரம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலி!

 
dead

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள அம்மாமடம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் - விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களது மூத்த மகன் மதன்குமார் (13). இவர் எட்டயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு எட்டயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. அப்போது, கணேசன் வீட்டின் வழியாக சென்ற மினசார கம்பி அறுந்து, அவர்களது வீட்டின் பின்புறமுள்ள கம்பி வேலியின் மீது விழுந்துள்ளது. இதனை அறியாத கணேசன் குடும்பத்தினர் கொட்டகையில் ஆடுகளை கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது, சில ஆடுகள் கம்பி வேலியில் சிக்கிக் கொண்டதை கண்ட மதன்குமார், அவற்றை மீட்க முயன்றார். 

tuticorin

அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தார். இதனை அடுத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் மதன்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர் அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார், அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.