ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

 
fero

பணி வரன்முறை செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர் சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமையில் 80-க்கும் மேற்பட்டோர் வந்தனர். அப்போது, பணி வரன்முறை செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

sdox

அப்போது, தூய்மை பணியாளர்கள், கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு அரசு அறிவித்த கொரோனா சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், தூய்மை பணியாளர்கள் மற்றும் டேங்க் ஆபரேட்டர்களை பணி வரன்முறை செய்து மாதம் குறைந்தபட்சம் 18,000 சம்பளமும்,  தூய்மை காவலர்களுக்கு மாதம் ரூ.10,000 சம்பளமும் இதர படிகளும் வழங்கவும் வலியுறுத்தி முழக்கமிட்டனர். 
மேலும், இந்த பணிகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி செய்து ஓய்வுபெற்றவர்களுக்கு, குறைந்தபட்சம் பணிக்கொடையும், ஓய்வுதியும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து, போராட்டக்காரர்களிடம் போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகள் குறித்து  உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச்சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்று, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.