ராமேஸ்வரத்தில் சமத்துவ பொங்கல் விழா : நாட்டுப்புற கலைஞர்களுடன் இணைந்து நடனமாடிய ஆட்சியர்!

 
rmm

ராமேஸ்வரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் சுற்றியும், கரகாட்டம் ஆடியும் அசத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் புதுரோடு ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில், மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் இன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கலந்து கொண்டு, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார். தொடர்ந்து, பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

rmm

பின்னர் இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் பேசுகையில், பல்வேறு சமுதாய மக்கள் ஒருங்கிணைந்து அனைவரும் ஒன்றுகூடி இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிப்பது மட்டற்ற மகிழ்ச்சியாகும். சமத்துவம் என்பது நம்மால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். நல்ல கருத்துக்களை பரிமாறி அனைவருடனும் நற்பண்புகளை வளர்த்து சமத்துவமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற விழாக்கள் நடைபெறுகின்றது என தெரிவித்தார். தொடர்ந்து, கிராம மக்களின் பல்வேறு கிராமிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

rmm

இதனை ஆர்வமுடன் கண்டுகளித்த ஆட்சியர், பின்னர் நாட்டுப்புற கலைஞர்களுடன் இணைந்து  தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் சுற்றியும், கரகாட்டம் மற்றும் ஒயிலாட்டம் ஆடியும் அசத்தினார். இந்த நிகழ்ச்சியில் ராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர் நாசர் கான், மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் வெங்கடாஜலபதி, ராமகிருஷ்ணா பள்ளி தாளாளர் பிரணவானந்தா சுவாமி மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.