வனப்பகுதி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க நகரும் நியாய விலைக்கடை... சேலம் ஆட்சியர் துவங்கி வைத்தார்!

 
slm

சேலம் மாவட்டம் கருங்காலி வனப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் விதமாக நகரும் நியாய விலைக்கடையை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர். இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, சாதிச்சான்றிதழ், உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 390 மனுக்கள் பெறப்பட்டன. குறிப்பாக இக்கூத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 32 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கிய ஆட்சியர் கார்மேகம், மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

slm

முன்னதாக, சேலம் மாவட்டம் கருங்காலி வனப்பகுதி மக்கள் நகரும் நியாய விலைக்கடை வழங்க கோரி, கடந்த ஜுன் 8ஆம் தேதி சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வின்போது கோரிக்கை மனு அளித்தனர். அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இன்று கே.கொண்டப்பநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செட்டிச்சாவடி நியாய விலை கடையில் இணைக்கப்பட்டு உள்ள கருங்காலி வனப்பகுதி மக்களுக்கு, அத்தியாவசிய பொருட்களை அவர்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயே பெற ஏதுவாக நகரும் நியாய விலைக்கடையினை ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிகுமார், ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) கீதா பிரியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.