சேலத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு நாளை முதல் விநியோகம்: ரேஷன் கடைகளில், ஆட்சியர் கார்மேகம் ஆய்வு!

 
slm

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு நியாய விலைக்கடைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை ஆட்சியர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார்.

சேலம் மாவட்டத்தில்  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக நியாய விலைக்கடைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ள பொருட்களை, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் ஆட்சியர் கார்மேகம் கூறியதாவது: - முதல்வர் அவர்களால்  அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொங்கல் பரிசு தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1,000/- ரொக்கத்துடன் முழுக்கரும்பும் சேர்த்து வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

முதல்வர் நாளை சென்னையில் பொங்கல் பெரிசு தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கும் அதே நேரத்தில் அந்தந்த மாவட்டங்களில் பொங்கல் பரிசு தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் 10,73,514 அரிசு பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 939 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஆக மொத்தம் 10,74,453 குடும்பங்களுக்கு  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு வழங்குவதற்காக சேலம் மாவட்டத்திற்கு ரூ.118.98  கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு நகர்புறப்பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 350 குடும்ப அட்டைதாரர்களுக்கும், கிராமப்புற பகுதிகளில் நாள் ஒனறுக்கு 250 குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் வகையில் கடந்த 3ஆம் தேதி முதல் இன்று வரை குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்படுகிறது. அனைத்து நியாய விலைக்கடைகளிலும் நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

slm

இதற்கென சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் தயார் நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இன்று அயோத்தியாபட்டினம், மின்னாம்பள்ளி மற்றும் காரியப்பட்டி ஆகிய நியாய விலைக்கடைகளில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குடும்ப அட்டைதாரர்கள் எந்தந்த நாட்களில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன் அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம் என்ற விவரத்தினை அந்தந்த நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள தெரிந்து கொள்ளும் வவையில் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் வழங்கப்படவுள்ள கரும்பு, சர்க்கரை, அரிசி ஆகியவைகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேற்கண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு விரிவான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக்கடைக்கு சென்று சமூக இடைவெளியை கடைபிடித்து பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.