சேலம் புத்தக திருவிழா : புதிய பேருந்து நிலையத்தில் நவ.20 - 30 வரை ஒலிப்பான்களுக்கு தடை!

 
slm

சேலம் புத்தக திருவிழா நடைபெறும் புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஒலிப்பான்களுக்கு வரும் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டு அமைதி பேருந்து நிலையமாக, ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் வரும் 20ஆம் தேதி புத்தக திருவிழா தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் நவ.20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை புத்தக திருவிழா நடத்தப்பட உள்ளது. இந்த விழாவை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வரும் 20ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

சேலம் புத்தக திருவிழா நாள்தோறும் காலை 9.30 மணிக்கு துவங்கி இரவு 9.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் தென்னிந்தியா முழுவதும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள், புத்தக வெளியீட்டாளர்கள் கலந்துகொள்ளும் வகையில் 210 அரங்குகள் அமைக்கப்படுகிறது. இக்கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் தலைச்சிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களை கொண்டு நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடத்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சார்ந்த பல்வேறு உள்ளுர் கலைகளான நாட்டுப்புற கலை, தெருக்கூத்து, பறை, தப்பு உள்ளிட்டவை இடம்பெறுகிறது.

salem

இப்புத்தக கண்காட்சியில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுவததோடு, சேலம் மாவட்டத்தை சார்ந்த வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட புத்தக தொகுப்புகளும் இடம்பெற உள்ளன. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்தும் தினசரி 10 ஆயிரம் அரசு, தனியார் பள்ளி குழந்தைகள் கண்காட்சியை பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 1 லட்சம் பள்ளிக்குழந்தைகள் கண்காட்சியை பார்வையிடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட உள்ளது. 

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் புத்தக கண்காட்சியை பார்வையிடும் வகையில் ஒரு நாள் பணி நாளாக கருதி அனுமதி வழங்கப்படும்.மக்கள் பிரதிநிதிகள், பொதுஇயக்கங்களின் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரும் கலந்துகொள்ள உள்ளனர். புத்தக கண்காட்சி அரங்கில் உணவக வசதி, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் வசதிக்காக குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

collector

புத்தக கண்காட்சி நடைபெறும் நவம்பர் 20 முதல் 30ஆம் தேதி வரை அனைத்து நாட்களிலும் அமைதி விமான நிலையம் போல சேலம் புதிய பேருந்து நிலையம் ஒலிப்பான்களுக்கு தடை செய்யப்பட்டு அமைதி பேருந்து நிலையமாகவும் மற்றும் 4 ரோடு முதல் 5 ரோடு வரையிலான சாலை அமைதி சாலையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் நடைபெற உள்ள இம்மாபெரும் புத்தக கண்காட்சியில் புத்தக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலசந்தர், உதவி செயற்பொறியாளர் அருள், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.