"ஈரோடு மாநகராட்சி சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு" - அமைச்சர் முத்துசாமி தகவல்!

 
muthusamy

ஈரோடு மாநகராட்சியில் உள்ள சாலைகள் மேம்பாட்டிற்கு அரசு ரூ.75 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாகவும், விரைவில் சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிகள் தினத்தையொட்டி நகர் புறம் மற்றும் கிராமங்களில் வார்டு வாரியாக இன்று மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்த உத்தரவிட்டார். அதன்படி, ஈரோடு மாநகராட்சி மண்டலம் 2-இல் நடந்த பகுதி சபை கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது, ஈரோடு மாநகராட்சி பகுதியில் பல்வேறு திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டு உள்ள சாலைகளை சரி செய்ய சிறப்பு நிதி பெறப்பட்டு சாலைகள் மேம்படுத்தப்படும். ஈரோடு மாநகராட்சியில் நிதி தட்டுப்பாடு உள்ளது. மாநகராட்சியில் உள்ள சாலைகள் மேம்பாட்டிற்கு அரசு ரூ.75 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. விரைவில் சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படும்.

muthu

ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் தங்கள் பகுதி பிரச்சனைகளை பற்றி பேச உரிமை உள்ளது. அதில் ஒரு சிலர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போல் பேசுகின்றனர் என்ற புகார் உள்ளது. அதனால் தான் ஈரோடு மேயர் நேற்று நடந்த கூட்டத்தில் கவுன்சிலரை யாரோ தூண்டிவிட்டு பேசுவதாக குறிப்பிட்டார். அவருக்கு வந்த தகவலின் அடிப்படையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம். ஈரோடு மாவட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே சில உறுப்பினர்கள் எதிர்க்கட்சி போல பேசவும் முற்படலாம். எனினும் மக்கள் பிரச்சினை பேசுவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. 

ஈரோடு மாநகராட்சி திமுக உறுப்பினர் குமலன்குட்டை பகுதியில் மாநகராட்சி சொந்தமான பூங்காவை இடித்தது குறித்த புகார் குறித்து அங்குள்ள மக்களிடம் விசாரித்து வருகிறோம். விசாரணை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஈரோடு மாநகராட்சி துப்புரவு பொறியியல் சுகாதார பிரிவு பணியாளர்கள் அவுட் சோர்சிங் முறையில் பணிக்கமர்த்தும் அரசு ஆணை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக பிரச்சனை தீர்க்கப்படும் என்றார். பகுதி மற்றும் வார்டு சபா கூட்டங்களில் பெறப்படும் முதியோர் ஓய்வூதியம், வேலைவாய்ப்பு, கடன் வசதி குறித்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படும். பின்னர் முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டு, அவைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்

mayor

முன்னதாக ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ்எஸ்பி நகரில் நடைபெற்ற பகுதி சபை கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் பேசிய அமைச்சர் முத்துசாமி, மக்களை தேடி மாநகராட்சி நிர்வாகம் வந்து, உங்களது குறைகளை கேட்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும், மாநகராட்சியில் நிதி தட்டுப்பாடு இருந்தபோதும், படிப்படியாக சாலை வசதி, தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய் போன்ற வசதிகள் உருவாக்கப்படும் என்றும் கூறினார். மேலும், 1 மாதம் கழித்து இங்குள்ள பொதுமக்கள் குறிப்பிட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்தது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையர் கிருஷ்ண சிவகுமார், கவுன்சிலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள். கலந்து கொண்டனர்.